நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் 20 ஆண்டுகளுக்கு பிறகு 300 இடங்களில் பொது குடிநீர் குழாய் திமுக நகர மன்ற தலைவர் திறந்து வைத்தார்
செங்கல்பட்டு மாவட்டம் செப். 22: நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் 20 ஆண்டுகளுக்கு பிறகு 300 இடங்களில் பொது குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது. இதனை நகர மன்ற தலைவர் எம் கே டி .கார்த்திக் திறந்து வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இதில் நகராட்சிக்கு உட்பட்ட 19வது வார்டில் வள்ளுவர் காலனி, முத்து மாரியம்மன் கோவில் தெரு, ராஜீவ் காந்தி நகர், லட்சுமி நகர், சர்ச் ரோடு, துலுக்கானத்தம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 3000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 20 ஆண்டுகளாக இப்பகுதிகளில் குடிநீர் பிரச்சினை இருந்து வந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி பொதுமக்கள் திமுக நகர மன்ற தலைவர் மற்றும் துணை தலைவரிடம் கோரிக்கை வைத்தனர். அதன் பேரில் நகர மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ₹.10 லட்சம் மதிப்பீட்டில் பெருமாட்டுநல்லூர் ஏரியில் உள்ள குடிநீர் கிணற்றிலிருந்து நந்திவரம் வழியாக 19வது வார்டில் உள்ள வள்ளுவர் காலனி- முத்துமாரியம்மன் கோயில் பிரதான சாலை ஓரத்தில் குடிநீர் பைப் லைன் அமைக்கப்பட்டு 300 இடங்களில் பொது குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது.
இதில் 19வது வார்டு கவுன்சலரும், நகர மன்ற துணை தலைவருமான வக்கீல் ஜி.கே.லோகநாதன் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் தாமோதரன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக திமுக நகரமன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக்தண்டபாணி கலந்துகொண்டு 300 இடங்களில் அமைக்கப்பட்ட பொது குடிநீர் குழாயை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். இதில் வார்டு கவுன்சிலர்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் பெண்கள் உட்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment